Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை: அரசு அறிவிப்பு.

by Editor

கல்வி
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை: அரசு அறிவிப்பு.


சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கல்லூரி மாணவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் “நான் முதல்வன்’ திட்டம், போட்டித் தேர்வு மாணவர்களுக்கு உதவும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முன்னெடுப்பைத் செய்துள்ளது.


குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில், 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.7,500 வழங்குவதற்கான சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.


இத்திட்டத்தின் கீழ், முதல்நிலை தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கு தயாராவதற்காக ரூ.25,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதோடு அவர்களது செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தோடும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஐ.ஏ.எஸ். ஆர்வலர்களுக்கான இந்த மாதாந்திர ஊக்கத்தொகை திட்டமானது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் செயல்படுத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அகில இந்திய போட்டித் தேர்வுகளில் மீண்டும் தமிழ்நாட்டை முன்னிலைக்கு கொண்டு வருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியும் பாடக்குறிப்புகளும் கிடைப்பதை இத்திட்டம் உறுதி செய்ய முனைந்துள்ளது.


மதிப்பீட்டுத் தேர்வை எழுத ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 21. பொதுப் பிரிவினருக்கான அதிகபட்ச வயது 32. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் சீர்மரபினருக்கும் அதிகபட்ச வயது 35, பட்டியல் வகுப்பினருக்கும் பழங்குடியினருக்கும் அதிகபட்ச வயது 37, மாற்றுத் திறனாளிகள் 42 வயதைக் கடந்திருக்கக் கூடாது. ஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பின் அடிப்படையில் மதிப்பீட்டுத் தேர்வுக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாக தேர்வுசெய்யப்பட உள்ள 1,000 மாணவர்களில் 21-22 வயது கொண்ட புதிய ஆர்வலர்கள் 50 பேருக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.


பட்டப்படிப்பின் போதே, போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு மிகப் பெரிய பயனளிக்கும். மருத்துவம், கால்நடை அறிவியல் மற்றும் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு மாணவர்களுக்குச் சலுகை அளிக்கப்படும். என்றாலும், அதுகுறித்து திறன் மேம்பாட்டுக் கழகமே முடிவு செய்யும். மதிப்பீட்டு தேர்வுக்கு https://nmcep.tndge.org/apply_now என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் வருகிற 17ம் தேதி ஆகும். அடுத்த மாதம் 10ம் தேதி முற்பகல் தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களிலும் மதிப்பீட்டு தேர்வு நடைபெற உள்ளது. சரியான விடைகளைத் தேர்வுசெய்யும் வகையில் 150 கேள்விகளை கொண்டதாக இத்தேர்வு அமையும். 100 கேள்விகள் பொது அறிவு பிரிவிலிருந்தும் 50 கேள்விகள் சி-சாட் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகளுக்கான திறனறிவு பிரிவிலிருந்தும் கேட்கப்படும்.


தவறான கேள்விகளுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் கிடையாது. வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். தேர்வுக்கான கால அளவு, 3 மணி நேரம். இத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் 1,000 மாணவர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படும். இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி இந்த பட்டியல் தயாரிக்கப்படும். இந்த மதிப்பெண் பட்டியலிலிருந்து சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கிவரும் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சித் தேர்வு மையம், கோயம்புத்தூரிலும் மதுரையிலும் இயங்கிவரும் அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணி பயிற்சி நிலையங்களுக்கும் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads