Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பிளஸ் 2  மதிப்பெண் கணக்கீடு நடத்தியது எப்படி? அதிக மதிப்பெண் [பெற விரும்பினால் தேர்வு எழுதலாம்

by Editor

கல்வி
பிளஸ் 2  மதிப்பெண் கணக்கீடு நடத்தியது எப்படி? அதிக மதிப்பெண் [பெற விரும்பினால் தேர்வு எழுதலாம்

 

பிளஸ் 2 வகுப்புக்கான இறுதி மதிப்பெண்கள் வல்லுனர் குழு பரிந்துரைப்படி கீழ்க்கண்ட விகிதாசார அடிப்படையில் வழங்கப்பட்டது.


மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காகப் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு தனது அறிக்கையை அளித்திருந்தது.


அந்த வகையில் 10ம் வகுப்புப் பொதுத் தேர்வு (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி) - 50%; பிளஸ் 1 வகுப்புப் பொதுத் தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண் மட்டும்) - 20%; பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வு, அக மதிப்பீடு 30% பிளஸ் 2 வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.


செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் பிளஸ் 1 வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு பிளஸ் 1 எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தாலோ, அந்த மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில்கொண்டு, 35 சதவீத மதிப்பெண் வழங்கப்படுகிறது.


பிளஸ் 1 எழுத்துத் தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு மற்றும் பிளஸ் 2 அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகிய தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் தமக்குக் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால் பிளஸ் 2 எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்களே அவர்களது இறுதி மதிப்பெண்களாக அறிவிக்கப்படும்.


தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கொரோனா பரவல் சீரடைந்தவுடன், மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்து, தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்விற்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads