Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ரூ.308.70 கோடியில் 3,087 கோவில்களுக்கு பாதுகாப்பு அறை கட்டப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு

by Editor

ஆன்மீகம்
ரூ.308.70 கோடியில் 3,087 கோவில்களுக்கு பாதுகாப்பு அறை கட்டப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு


திருக்கோவில்களில் பாதுகாப்பு அறை கட்டுவதற்கு ரூ.10 லட்சம் வீதம் 3 ஆயிரத்து 87 கோவில்களுக்கு ரூ. 308.70 கோடி தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை கோடம்பாக்கம் புலியூர் பரத்வாஜேஸ்வரர் கோவிலில் (திருவாலீஸ்வரம்) உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் பேசும்போது கூறியதாவது:

தமிழ்நாட்டில் கோவில்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் களவு எச்சரிக்கை மணி பொருத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு அறை கட்டுவதற்கு ஒரு திருக்கோவிலுக்கு ரூபாய் 10 லட்சம் வீதம் 3 ஆயிரத்து 87 கோவில்களுக்கு பாதுகாப்பு அறை கட்டுவதற்கு ரூ.308.70 கோடி தொகையினை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக நிதியிலிருந்து 1.11.2018 அன்று ஒதுக்கப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூர், பசுபதீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு அறை ரூபாய் 22.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை கோடம்பாக்கம் புலியூர் பரத்வாஜேஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளின்படி முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய வடிவமைப்பில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறை 22 சிலைகள் வைக்கும் அளவிற்கு கட்டப்பட்டுள்ளது. விலை மதிப்பு மிக்க சிலைகள் பாதுகாப்பாக இருக்க இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3085 கோவில்களில் அந்தந்த கோவில்களின் ஆகமம் மற்றும் பழக்க வழக்கங்களின்படி விரைவில் கட்டி முடிக்கப்படும்.


இக்கோவிலை சுற்றி இருக்கும் மதுபான கடைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேவாரம், திருவாசகம் போன்ற ஆன்மீக வகுப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.


சிலர் நான் தொகுதி அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். அவர்களுக்கு நான் கூறிக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் 25 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இதுவரை 130 க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளேன். கொரோனா தொற்று முழுமையாக முடிந்தவுடன் பக்தர்களை பக்தி சுற்றுலா அழைத்து செல்லப்படும்.


சிதம்பரம் நடராஜர் கோவிலை பற்றி முக நூலில் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். நீதிமன்றத்தில் சிதம்பரம் கோவில் பற்றிய வழக்கு நடந்து கொண்டிருப்பதால், பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இறைவனை வழிபடும் வகையில் இந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாதுகாப்பு அறை (Strong room) அமைப்பதற்கான அரசாணை 2017 ல் வெளியிடப்பட்டும், அண்ணா திமுக அரசு 4 வருடமாக பாதுகாப்பு அறை அமைப்பதற்கான பணியில் ஈடுபட வில்லை. தற்போது நாங்கள் அந்த பணிகளை விரிவுபடுத்தி வருகிறோம். வெளிப்படை தன்மையோடு, வேண்டியவர், வேண்டாதவர் என பார்க்காமல் திறமையான பேராசிரியர்களை கல்லூரிகளில் நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சட்டப்படி வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்டு கொண்டு வருவதற்கான ஆலோசனைகளை நடத்தி வருகிறது. வெளிநாட்டு விவகாரம் என்பதால் அவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பிரதமர் அமெரிக்கா சென்ற போது கொண்டு வரப்பட்ட 11 சிலைகள் தமிழகத்தை சேர்ந்தவையாக இருப்பதாக கூறப்படுகிறது. அது பற்றி ஒன்றிய அரசுடன் பேசியுள்ளோம். விரைவில் சிலைகள் மீட்டுக் கொண்டு வரப்படும். எவ்வளவு சிலைகள் திருடப்பட்டுள்ளன எவ்வளவு சிலைகள் எந்தெந்த அருங்காட்சியகத்தில் உள்ளன என்கின்ற கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கின்றது. இப்பணிகள் முடிந்தவுடன் மீட்கப்பட்ட சிலைகள் பற்றி தெரிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவில்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஒவ்வொரு மண்டலமாக ஆய்வு செய்து வருகிறோம். சென்னை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மண்டலங்கள் முடிந்துள்ளது. தற்போது மற்ற மண்டலங்களில் உள்ள திருக்கோவில்களில் ஆய்வு செய்யப்பட்டு கோவில்களின் தேவை அடிப்படையில் பணிகள் தொடங்கப்படும்.


தமிழ்நாடு முழுவதும் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்க ளிடமிருந்து மீட்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட நிலங்கள் மூலம் திருக்கோவிலுக்கு வருவாயை பெருக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.47 முதுநிலை திருக்கோவில்களில் தல வரலாறு குறித்த புத்தகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. முதற்கட்டமாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தலவரலாறு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மற்ற கோவில்களிலும் வெளியிடப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Share via
Advertiment

More Stories

Ads