Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திருச்செந்தூர் கோவிலில் ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து சாப்பிட அன்னதானக் கூடம் அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல்

by Editor

ஆன்மீகம்
திருச்செந்தூர் கோவிலில் ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து சாப்பிட அன்னதானக் கூடம் அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடி செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்துள்ளார்.


சென்னை நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.


இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மானிய கோரிக்கையின்போது துறை வாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோவிலான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
திருக்கோவில்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது, தங்கும் விடுதிகள், அன்னதானக் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், வியாபார கடைகள், தீ அணைப்பு வாகனம் நிறுத்துமிடம், அவரச ஊர்தி, யானைகள் பாராமரிப்பு கொட்டகை, வாகனம் நிறுத்துமிடம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அங்கபிரதக்ஷனம் செய்யும் பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்காமல், திருப்பதியை போன்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
திருக்கோவிலை சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் ராஜகோபுரம் தெரியும் அளவிற்கு கட்டிடங்கள் கட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்னதானக் கூடம் கீழ்தளம், முதல்தளம் என 1000 நபர்கள் ஒரே நேரத்தில் உணவருந்தும் அளவிற்கு திட்டங்கள் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் காத்திருக்கும் அறையில், தொலைக்காட்சி, கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.


அர்ச்சகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். கோவிலை சுற்றியுள்ள பனை பொருட்கள், கடல் சார் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தற்போது உள்ள கடைகளைவிட அதிகளவில் விற்பனை கடைகள் அமைக்கப்படும். இப்பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


இந்த கூட்டத்தில் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமர குருபரன், கூடுதல் ஆணையர் (விசாரணை) ந.திருமகள், இணை ஆணையர் வான்மதி, திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் அன்புமணி மற்றும் எச்.சி.எல். நிறுவனத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share via
Advertiment

More Stories

Ads