Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

‘‘அப்பாவின் கடன், வீட்டு வாடகையை  அடைக்கவே நான் நடிகனானேன்’’  விஜய் சேதுபதி

by Editor

சினிமா
 ‘‘அப்பாவின் கடன், வீட்டு வாடகையை  அடைக்கவே நான் நடிகனானேன்’’  விஜய் சேதுபதி


தென்னிந்திய திரைப்படம் தொழிலாளர்களின் (‘பெப்சி’ ) குடியிருப்பு திட்டத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார். ‘ஒரு கோடி மட்டுமல்ல...இன்னும் உதவுவேன்’ என்று விஜய் சேதுபதி பெருமிதத்தோடு கூறினார்.
’விஜய் சேதுபதி போன்ற மனிதர்களால் தான் உலகம் தழைத்தோங்குகிறது’- என்று அப்போது டைரக்டர் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பாராட்டினார்.விழாவில் ‘பெப்சி’ செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் தயாரிப்பாளர் எஸ். தாணு, விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை விஜய் சேதுபதி, தலைவர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட ‘பெப்சி’ நிர்வாகிகளிடம் வழங்கினார். முன்னதாக மேன் கைண்ட் என்ற நிறுவனம் சார்பில் 31 லட்ச ரூபாய் நிதி உதவியாக ‘பெப்சி’ சம்மேளனத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.


விழாவில் விஜய் சேதுபதி பேசுகையில் கூறியதாவது:
நான் திரைத்துறையில் வருவதற்கு முக்கியமான காரணம் என் தந்தையாரின் ரூ.10 லட்சம் கடன் தான். சிறிய வயதில் எனக்கு திரைப்படம் பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லை. துபாய்க்குச் சென்று சம்பாதித்து, கடனை அடைத்து விடலாம் என நினைத்தேன். அங்கு சென்று சம்பாதித்து, வட்டியை மட்டும் தான் கட்டினேன். அசலை கட்ட முடியவில்லை.அதன் பிறகு வீட்டு வாடகை. இருபதாம் தேதி ஆனவுடன் எனக்குள் பதற்றம் தொற்றிக்கொள்ளும். அடுத்த மாதம் எப்படி வாடகை கொடுக்கப் போகிறோம் என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும்.அதன்பிறகு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வீட்டு உரிமையாளர்கள் திடீரென்று வீட்டு வாடகையை உயர்த்திவிடுவார்கள். என்ன கணக்கு என்று தெரியாது. விலைவாசி உயர்வை விட, வீட்டு வாடகை உயர்வு தான் அதிகம். இதுதான் பதற்றத்தை ஏற்படுத்தும்.


இதனால் எப்பாடுபட்டேனும் ஒரு சொந்த வீடு வாங்கிவிட வேண்டும். அப்பாவின் 10 லட்சம் கடனை அடைத்துவிட வேண்டும். இந்த இரண்டு விஷயத்திற்காக தான் சினிமாவின் நடிக்க தொடங்கினேன். இங்கு வந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் நுழைந்தேன்.இப்படி தெரியாமல் தான் சினிமாவில் நடிக்க தொடங்கினேன். திட்டமிட்டு நடிக்க வரவில்லை. அப்படி ஒரு ஆசையும் இருந்ததில்லை.வீட்டு வாடகை என்பது மிகப்பெரிய பாரம். சில இடங்களில் ஏதோ பாகிஸ்தானில் குடி இருக்கிறோம் என்ற உணர்வு வரும். வீட்டு உரிமையாளர்கள் விதிக்கும் நிபந்தனைகள் அப்படி இருக்கும்.


அதனால் சொந்த வீடு கனவு என்பது எல்லா தொழிலாளர்களுக்கும் இருக்கும் ஒரு கனவு. அந்தக் கனவு.. அந்த ஆசை.. இன்று நிறைவேறத் தொடங்குகிறது.இவ்வாறு விஜய்சேதுபதி கூறினார்.ஆர்.கே. செல்வமணி பேசுகையில்,''இது ஒரு கனவு. ஒரு உதவி இயக்குனருக்கு திரைப்படம் இயக்க வேண்டும் என்பது எப்படி கனவாக இருக்கிறதோ.. அதேபோல் திரைப்படத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு.


எங்களின் இந்த குடியிருப்பு வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் மொத்தம் ஒன்பது தொகுதிகளாக கட்டப்பட இருக்கிறது . இதில் ஒரு தொகுதிக்கு 248 குடியிருப்புகள் இடம்பெறும். இதில் ஒரு குடியிருப்பு வளாகத்திற்கு ‘விஜயசேதுபதி டவர்’ என பெயரிட்டிருக்கிறோம். இந்த பெயர் சூட்டலுக்கு அவர் மறுப்பு தெரிவித்தாலும், அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும், நாங்கள் சூட்டி இருக்கிறோம். இந்த குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு, அவர்களின் ஆயுள் முழுவதும் விஜயசேதுபதி கடவுளாக தான் தெரிவார்” என்றார் ஆர்.கே. செல்வமணி

Share via
Advertiment
Ads