Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திருமண பாக்கியம் அருளும்  தொட்டியம் வேதநாராயணபுரம்  வேதநாராயணபெருமாள் கோவில்

by Writer

ஆன்மீகம்
திருமண பாக்கியம் அருளும்  தொட்டியம் வேதநாராயணபுரம்  வேதநாராயணபெருமாள் கோவில்

 

 திருச்சி மாவட்டம்.தொட்டியம் வட்டம்,வேதநாராயணபுரம்,அருள்மிகு வேதநாராயணபெருமாள் கோவில் சிறப்பு வாய்ந்த தலமாகும் .


இத்தலத்தில் இருக்கும் வேதநாராயண பெருமாள், வேதநாயகித் தாயார் உலகையே ரட்சித்து ஞானம் வழங்கி அருளும் அற்புதத் திருத்தலம் ஆகும். வேதநாராயணபெருமாள் கோவில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது.


கம்பத்தடி அனுமன், கருடாழ்வார் ஆகியோரைத் தரிசித்தபடி உள்ளே சென்றால் வேதநாராயணரைத் தரிசிக்கலாம். சிவனுக்கு உகந்த வில்வ மரத்தடியில் பெருமாளின் திருவடிகள் உள்ளது. அருகில் ஆண்டாள் நாச்சியார் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறாள்.4 வேதங்களையும் தலையணையாகக் கொண்டு ஆதிசேஷன்மீது பள்ளி கொண்டபடி நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மதேவருக்கு வேத உபதேசம் செய்கிறார் திருமால் என்பது ஐதீகம்.பெருமாளின் திருவடியில் தேவியும் பூதேவியும் இருக்கிறார்கள். கீழே பிரகலாதன் மூன்று வயதுக் குழந்தை வடிவில் அழகாக காட்சித் தருகிறார். பிரமன், பிரகலாதன், சுக்கிரீவன், கருடன், அனுமன், ஆரையர், சோழர் முதலியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம். இத்தலம் ஆதிரங்கம் அதாவது முதல் ரங்கம் என்று போற்றப்படுகிறது.


புகழ் பெற்ற வைஷ்ணவத் தலமான வேதநாராயண பெருமாள் தலத்தில் வைகாசி மாதம் தேரோட்டம் நடைபெறும். எம்பெருமாள் உபயநாச்சியாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்த பின்பு தேர் நிலைக்கு வந்தடையும்.வேதநாராயணபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து நிகழ்ச்சி பத்து நாட்களாக நடைபெறும். தினமும் காலை, மாலை சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்த பின்பு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.27 அகல் தீபமேற்றி, நம் ஜாதகத்தைப் பெருமாளின் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் என்றும் ஐந்து நெய் விளக்கேற்றி, வெண்தாமரை மலரால் அர்ச்சித்து வழிபட, கல்வி மேம்படும், தொழில் விருத்தியாகும், வியாபாரம் செழிக்கும் என்றும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.


மகாபலிச் சக்கரவர்த்தி மைசூரை நோக்கிப் படையெடுத்துச் செல்லும் வழியில் மண்மேடாக இருந்த இடத்தில் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார். அப்போது மன்னன் கனவில் தோன்றிய பெருமாள், 'இங்கே பூமிக்கு அடியில் இருக்கும் என்னை மேலே எழுந்தருளச் செய்து, கோயில் எழுப்பு “உனக்கு ஜயம் உண்டாகும்” என அருளினார். மன்னர், விடிந்ததும் பெருமாளின் திருவிக்கிரகத்தைப் பூமியில் இருந்து எடுத்து, பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்து வழிபட்டுச் சென்றார்.


வேதநாராயணபெருமாள் திருக்கோவிலுக்காக அங்கே ஒரு கிராமத்தை உருவாக்கி, அதற்குத் திருநாராயணபுரம் என்று பெயர் சூட்டி கிராமத்தையும் நிலங்களையும் தானமாக அளித்துவிட்டுச் சென்ற பிறகு மைசூரை வென்றார் என்கிறது தல வரலாறு.
பிரகலாதனைக் காப்பதற்காகவும் இரணியனை வதம் செய்வதற்காகவும் நரசிம்ம அவதாரம் எடுத்தார் திருமால். பிறகு பிரகலாதன், 'பெருமாளே! தங்களை சாந்த ரூபமாகத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும்’ என வேண்டிட திருமால் “திருநாராயணபுரத்துக்கு வா” என்று பிரகலாதனை அழைத்தார். அதன்படி இங்கே சாந்த ஸ்வரூப மூர்த்தியாக இருந்து தன்னை நாடி வரும் அன்பர்களுக்கெல்லாம் அருள் புரிகிறார் வேதநாராயண பெருமாள் என்கிறது தல புராணம்.


பிரம்மாவின் கர்வத்தை ஒடுக்குவதற்காக இங்கே வேதநாராயணராக இருந்து பிரம்மாவுக்கு வேத ஞானம் செய்தருளினார். பிறர் நம்மை வணங்குவதற்கு மிக முக்கியமான பண்பு நாம் பணிவோடு இருத்தலே ஆகும். அதைவிட பெரிய பண்பு மற்றவர்களிடம் இனிய ஆறுதலான சொற்களை நம்பிக்கையோடு கூறவதாகும். இவைகளே நம்முடைய அகத்தையும் புறத்தையும் அழகு படுத்தும் அணி கலன்களாகும். இத்தலத்தில் வேதநாராயண பெருமாள், குரு ஸ்தானத்தில் இருந்தும் புதனுக்கு அதிபதியாக இருந்தும் அருள்பாலிகிறார், இத்தலத்தில் வந்து வேண்டிக்கொண்டால் கல்வியும் ஞானம் கைகூடும் என்பது நம்பிக்கை.
ஆர் .சக்தி பிரியன் 

Share via
Advertiment

More Stories

Ads