Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மதுரை பிரசித்திப் பெற்ற அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவில் ஆடித் தேரோட்டம்.

by Staff

ஆன்மீகம்
மதுரை பிரசித்திப் பெற்ற அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவில் ஆடித் தேரோட்டம்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவிலில் உள்ள ஶ்ரீ சுந்தரராசா பெருமாள் என்று அழைக்கக்கூடிய  ஶ்ரீகள்ளழகர் திருக்கோவிலில்,  கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் சித்திரை திருவிழாவும், ஆடிப் பௌர்ணமியையொட்டி நடைபெறும் தேரோட்ட விழாவும் உலக பிரசித்தி பெற்றது. இதில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபடும் நிலையில், 

இந்த ஆண்டிற்கான 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பௌர்ணமி பெருந்திருவிழா கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி திருக்கோவில் பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க, திருக்கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில், கருடன் உருவம் பதித்த கொடியுடன் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தொடர்ந்து, ஶ்ரீகள்ளழகர் ஶ்ரீ தேவி மற்றும் பூதேவியருடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி உற்சவ மூர்த்தியான ஶ்ரீகள்ளழகர் மற்றும் ஶ்ரீதேவி , பூதேவியருக்கு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 

இதையடுத்து, தேரடியில் உள்ள 60 அடி உயரம் கொண்ட திருத்தேரில் தேவியருடன் எழுந்தருளப்பட்ட ஶ்ரீகள்ளழகருக்கு தீபாராதனை நடைபெற்றதைத் தொடர்ந்து, கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணை முட்டும் வகையில் கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

அப்போது ஆடி அசைந்து வந்த திருத்தேருக்குள்  இருந்த ஸ்ரீ கள்ளழகரின் அந்த அழகான காட்சியினை காண்பதற்கு இரு கண்கள் போதாது என்று சொல்லக்கூடிய அளவில் பக்தர்கள் மெய்சிலிர்த்து தரிசனம் செய்யக்கூடிய காட்சியையும் நாம் காண முடிந்தது.

மேலும் இந்த தேரோட்டத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர், 100க்கும் மேற்பட்ட  சுகாதாரத்துறை மற்றும், மருத்துவத்துறையினர், வருவாய்த்துறையினர் ஆகியோர் திருக்கோவில் நிர்வாகத்துடன் இணைந்து பக்தர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மற்றும் மருத்துவ உதவி ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மேலும், திருக்கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் முக்கிய இடங்களில் 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா மற்றும் ட்ரோன் கேமரா அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுபட்டனர் 
 

Share via
Advertiment

More Stories

Ads