Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கீழடி அருகே அகரத்தில் ஒரே குழியில் மூன்று உறைகிணறுகள்

by Editor

தமிழர் உலகம்
கீழடி அருகே அகரத்தில் ஒரே குழியில் மூன்று உறைகிணறுகள்

கீழடி அருகே அகரத்தில் ஒரே குழியில் மூன்று உறைகிணறுகள் தண்ணீர் எடுக்க பயன்படும் பானைகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 இடங்களிலும் அகழாய்வு பணிகள் நடைபெறுகின்றன. மணலூரில் குறிப்பிடத்தக்க பொருட்கள் கிடைக்காததால் அகழாய்வு பணிகள் நடைபெறவில்லை. கீழடி, அகரம், கொந்தகையில் தலா எட்டு குழிகள் வரை தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. செப்டம்பருடன் பணிகள் நிறைவடைய உள்ளன. அகரத்தில் ஒரே குழியில் மூன்று உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் தலா மூன்று அடுக்குகளுடன் கிடைத்துள்ளன.

ஒரு உறைகிணற்றினுள் தண்ணீர் எடுக்க பயன்படுத்திய பானைகளும் கிடைத்துள்ளன. இதில் ஒரு பானை சிதிலமடைந்தும் மற்றொரு பானை முழுமையாகவும் உள்ளன. அருகில் தோண்டப்பட்ட மற்றொரு குழியிலும் சிதிலமடைந்த உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் இதுவரை 7 உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வில் இதுவரை மொத்தம் 20 உறைகிணறுகள் வரை கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அகரத்தில் ஆறாம்கட்ட அகழாய்விலும் 7 உறைகிணறுகள் கண்டறியப்பட்டன.

ஆறாம்கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட உறைகிணறுகள் ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டுள்ளன. அகரத்தில் தொடர்ச்சியாக உறைகிணறுகள் கிடைத்து வருகின்றன. இது இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகளவில் இருந்ததற்கான சான்றாகவும், வீடுகள் தோறும் உறைகிணறுகள் வைத்திருந்ததற்கு சான்றாகவும் கருதப்படுகிறது. அகழாய்வில் கண்டறியப்பட்ட உறைகிணறுகளை முழுமையாக வெளியே கண்டறியும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Share via
Advertiment

More Stories

Ads